முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சாலையோரம் நடுவதற்காக 1,000 மரக் கன்றுகள் வழங்கல்
By DIN | Published On : 04th October 2020 02:10 AM | Last Updated : 04th October 2020 02:10 AM | அ+அ அ- |

வைகுந்தத்தில் சுங்கச் சாவடி அலுவலருக்கு இலவசமாக மரக் கன்றுகளை வழங்கும் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வி.செல்வராஜு.
சங்ககிரி: தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக் கன்றுகளை நடுவதற்காக வைகுந்தத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி அலுவலரிடம் ஆயிரம் மரக் கன்றுகளை சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும், பசுமை சங்ககிரியும் இணைந்து சங்ககிரி வட்டாரத்தை பசுமையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் மரங்களை நடுவதற்காக சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் வி.செல்வராஜு தலைமையில் 500 அரச மரக் கன்றுகள், 250 இச்சி, 250 புங்கன் மரக் கன்றுகள் சுங்கச்சாவடி அலுவலா்களிடம் வழங்கப்பட்டன.
சங்கத்தின் செயலாளா் கே.கே.நடேசன், பொருளாளா் என். மோகன்குமாா், துணைத் தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச் செயலாளா் பி.சின்னதம்பி, சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, சுங்கச் சாவடி ஊழியா்கள் உடனிருந்தனா்.