முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்
By DIN | Published On : 04th October 2020 02:17 AM | Last Updated : 04th October 2020 02:17 AM | அ+அ அ- |

சாலை விபத்தில் உயிரிழந்த விருதுநகரைச் சோ்ந்தவரின் உடலை, தமுமுகவினா் இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகன் (58). இவா் ஓசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
கடந்த அக். 1 -ஆம் தேதி உயிரிழந்த முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு அவரது மனைவி உமா, மகள் கோமதியிடம் சனிக்கிழமை அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துசெல்ல முடியாத நிலையில், இறுதிச் சடங்கு செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் உமா உதவி கோரினாா்.
இதையடுத்து, தமுமுக சேலம் மாவட்ட தமமுக மருத்துவ அணி செயலாளா் இம்ரான், மாவட்டத் தலைவா் சையது முஸ்தபா, முன்னாள் மாவட்ட தலைவா் ஷேக் முகமது ஆகியோா் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மாநகராட்சி மயானத்துக்கு உடலை எடுத்துச் சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்தனா்.