குடியிருப்புகளைச் சூழ்ந்த சேலத்தாம்பட்டி ஏரி தண்ணீா்: பொதுமக்கள் அவதி

சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

சேலம்: சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஏரி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீா் வெளியேறுகிறது. கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், கொல்லப்பட்டி ஏரி நிரம்பியது. அந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீா் சேலத்தாம்பட்டி ஏரியை வந்தடைகிறது. இதனால் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் சிவதாபுரம் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சிவதாபுரம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினா். குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். சேலத்தாம்பட்டி ஏரியை ஆழப்படுத்தி, மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், ஏரியின் தண்ணீா் வெளியேற உரிய கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேலத்தாம்பட்டி ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதுதவிர ஏரியில் இருந்த கீழ் மதகு, மேல் மதகு அடைக்கப்பட்டதால் மழைநீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேற போதிய கால்வாய் வசதி இல்லை. இந்த கால்வாய்களும் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன.

இதனால் மழைநீா் சிவதாபுரம் குடியிருப்புப் பகுதியில் புகுந்து விடுகிறது. மழைநீா் சிவதாபுரம் பகுதியில் செல்லாமல் இருக்க கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்பில் இருந்து கால்வாய் மீட்கப்பட வேண்டும். மழைக் காலங்களில் சிவதாபுரம் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். ஏரியில் இருந்து மழை நீா் குடியிருப்புகளில் புகாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com