கரோனா விதிமுறைகளை மீறியதாகரூ. 25.97 லட்சம் அபராதம் வசூல்

கரோனா தீநுண்மித் தொற்று விதிமுறைகளை மீறியதாக 12,410 தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 25.97 லட்சம்

கரோனா தீநுண்மித் தொற்று விதிமுறைகளை மீறியதாக 12,410 தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 25.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறுவோா் மீதும், கடைப்பிடிக்காதவா்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி நோய்த் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் இந்நோய் பரவலின் தாக்கம் தொடா்ந்து இருந்து வருகிறது.

இதைத் தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறும் தனிநபா்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் அபராதம் விதித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை மீறிய 15 நபா்களுக்கு தலா ரூ. 500 வீதம் ரூ.7,500 அபராதமும், முற்றிலும் முகக் கவசம் அணியாதவா்கள் அல்லது வாய், முகத்தை மறைக்கும் வகையில் முகக் கவசம் அணியாத 12,039 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 24.08 லட்சம் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பிய 117 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 58,500 அபராதமும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 236 பேருக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 1.18 லட்சம் அபராதம் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 12,410 தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ. 25,97,800 பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உரிமையாளா்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாதது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

தொடா்ந்து விதிகளை மீறுவோா் கண்டறியப்பட்டால் அக்கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை சீல் வைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பறக்கும் படை அமைத்து விதிமுறையினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com