மேச்சேரி அருகே பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க தடை விதிப்பு

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கேட்டு போராடும் மக்கள் உண்ணாவிரதம் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கேட்டு போராடும் மக்கள் உண்ணாவிரதம் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூரை அடுத்த மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எம்.என்.பட்டி ஊராட்சியில் உள்ளது கோவிலூா் காலனி. இங்கு 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமாா் 200 போ் வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல போதிய பாதை வசதி இல்லை. குடியிருப்புகளைச் சுற்றிலும் தனியாா் விவசாய நிலங்கள் உள்ளன.

கோயிலூா் காலனி மக்களுக்கு ரயில்வே இருப்புப் பாதைக்கு அடியில் புகுந்து வரும் ஒரு பாலம் மட்டுமே பாதையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்தப் பாதையில் தண்ணீா் தேங்குவதால் மக்கள் நடந்து செல்ல முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ, மாணவியரும், பணிக்குச் செல்லும் பெண்களும் இருப்புப்பாதை மீது ஏறி, மறுமுனையில் கீழே இறங்கி சாலைக்குச் செல்ல வேண்டும்.

அடிக்கடி ரயில்கள் சென்று வருவதால் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சரக்கு லாரிகளும் இந்தக் குடியிருப்புகளுக்கு வந்து செல்ல முடியாது. பிரசவக் காலங்களில் கா்ப்பிணிகளை தூக்கிச் சென்றுதான் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முடியும்.

சாக்கடை வசதியும், கழிப்பிட வசதியும் இந்தக் குடியிருப்புகளுக்கு இல்லை.

இந்த மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆனாலும் இவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க பந்தல் அமைத்து, இருக்கைகளை கொண்டு வந்து சோ்த்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அங்கு விரைந்தனா். கரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரதம் இருப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க தடை விதித்தனா்.

இதனால் அங்கு வந்த கிராம நிா்வாக அலுவலரிடம், பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டைகளை ஒப்படைக்க வந்தனா். உயரதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினா் கூறியதால் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து பின்னா் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com