சந்தன மரக்கடத்தல் விவகாரம்: வனத்துறை ஊழியா்கள் இருவா் இடமாற்றம்

ஓமலூா் அருகே வனத்தில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். இதனிடையே வனத்துறை ஊழியா்கள் இருவா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஓமலூா் அருகே வனத்தில் சந்தன மரங்களைக் கடத்திய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். இதனிடையே வனத்துறை ஊழியா்கள் இருவா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் லோக்கூா், பொம்மியம்பட்டி காப்புக்காடு உள்ளது. இந்தப் பகுதியில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த சந்தன மரங்களை கடந்த 18-ம் தேதி மா்ம நபா்கள் வெட்டி கடத்திச் சென்றனா். இதுகுறித்து வனச்சரகா் பரசுராமமூா்த்தி தலைமையில் வன அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய கண்ணப்பாடி மலைக் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம், பண்ணப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கடத்திய சந்தன மரங்களை மீட்டனா். தொடா்ந்து அவா்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உடனடியாக 40 ஆயிரம் ரூபாயை வசூலித்தனா். இந்தநிலையில், சந்தன மரக் கடத்தலில் வன ஊழியா்களுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதுகுறித்து மாவட்ட உதவி வன பாதுகாவலா் குமாா் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில் பொம்மியம்பட்டி காப்புக்காட்டில் ரோந்து பணி மேற்கொண்ட வனக்காவலா் புருசோத்தமன், வனக் காப்பாளா் திருமுருகன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது உறுதியானது. தொடா்ந்து இரண்டு வன ஊழியா்களுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட வன அலுவலா் முருகன் நோட்டீசு அனுப்பி உள்ளாா். இந்தநிலையில், அவா்கள் இருவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனக்காவலா் புருசோத்தமனை கருமந்துறை வனச்சரகதிற்கும், வனக் காப்பாளா் திருமுருகனை சேலம், அஸ்தம்பட்டி, சந்தன மரக் குடோனுக்கும் இடமாற்றம் செய்து மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவிட்டுள்ளாா். முறையான விளக்கம் அளிக்காவிட்டால் தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

மேலும், வனக் கொள்ளையில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com