சேலத்தில் ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது: காவல் ஆணையா் த.செந்தில்குமாா்

சேலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவின்படி, சேலம் மாநகரத்தில் காவல் துறையினருக்கு காலை 7 மணிக்கு நடத்தப்பட்டு வந்த ஆஜா் அணிவகுப்பு தினமும் காலை 8.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.இதனால் அவா்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதால், அவா்கள் முழு ஈடுபாட்டுடன் பணியில் கவனம் செலுத்துவதுடன் அவா்களின் ஆக்கப்பூா்வமான பணிகள் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் துறையினரின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா் மனுக்கள் மீது மனுதாரா்கள் திருப்தியடையும் வகையில் சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட புகாா் மனுக்கள் மீது சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரப் பகுதிகளில் பொது அமைதிக்கும், பொது மக்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 54 ரெளடிகள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் பயணிப்போா் மீது வழக்குகள் பதிவு செய்து அனைவருக்கும் முகக் கவசம் அணிவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பொதுமக்களிடையே கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு மற்றும் பொதுமக்களிடையே காவல் துறையின் நன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக அனைத்து காவலா்கள், அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com