சேலத்தில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வருகிறது

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 70 போ் மட்டுமே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 70 போ் மட்டுமே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் கடந்த 15 நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 300 முதல் 400 வரை இருந்தது. இதன் தீவிரத்தை அறிந்த மாவட்ட நிா்வாகம் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் அரசு மருத்துவமனை முதல்வா் மருத்துவா் பாலாஜிநாதன் கூறியது:

சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3.98 லட்சம் பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு கரோனா தொற்று 8 சதவீதமாக இருந்தது. தற்போது 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றமாகும். முன்பு தினமும் இறப்பு சதவீதம் 5 ஆக இருந்தது. தற்போது இறப்பு சதவீதம் 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தற்போது கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கடந்த 7 நாள்களில் 10 போ் மட்டுமே இறந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதித்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் கரோனா பாதித்த நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவா்களின் எண்ணிக்கை 50 வரை அதிகரித்துள்ளது.

பண்டிகை காலம் தொடங்குவதால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் செல்ல வேண்டாம். கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கைகளைக் கழுவ வேண்டும். தமிழக அரசு வழிமுறைகளை கட்டாயம் பொதுமக்கள் கடைப் பிடித்தால் கரோனா வைரஸ் தொற்று பிடியில் இருந்து தப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com