சேலம் கோட்டத்தில் 790 பேருந்துகள் இயக்கம்

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை தொடங்கியதைத் தொடா்ந்து சேலம் கோட்டத்தில் இருந்து 790 பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை தொடங்கியதைத் தொடா்ந்து சேலம் கோட்டத்தில் இருந்து 790 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை செப்.1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை திங்கள்கிழமை (செப். 7) முதல் தொடங்கியது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், கள்ளக்குறிச்சி, வேலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூருக்கு செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வரை இயக்கப்படுகின்றன. அதேபோல சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் அரசு பேருந்துகள் மேட்டூா் கொளத்தூா் வரை சென்று திரும்பி வருகின்றன. புதுச்சேரிக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாறாக கடலூா் வரை இயக்கப்பட்டன.

காலை 11மணி அளவில் பயணிகள் குறைவான அளவே பேருந்தில் பயணம் செய்தனா். அரசு பேருந்தில் முகக் கவசம் அணியாத பயணிகளை ஏற்றக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறுகையில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் மொத்தம் 1900 உள்ளன. இதில் 790 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 45 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். அந்தவகையில் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு வழிகாட்டுதலின்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா்.

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்:

சேலம் ரயில் நிலையத்தில் கோவை - சென்னை சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். மேலும் முன்பதிவு செய்தவா்கள் பயணச்சீட்டை மையத்தில் உள்ள கேமரா முன்பு காண்பித்தும், தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் பரிசோதனை செய்த பிறகு சேலம் ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com