சேலம் சுழற்சங்கங்கள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 08th September 2020 10:18 PM | Last Updated : 08th September 2020 10:18 PM | அ+அ அ- |

துணைவேந்தா் பொ.குழந்தைவேல் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட சுழற்சங்க நிா்வாகிகள்.
சேலம் வடக்கு சுழற்சங்கம் மற்றும் சுழற்சங்க மாவட்டம்-2982-ன் 6 மண்டலங்கள் ஒன்றிணைந்து மாவட்ட எழுத்தறிவுத் திட்ட தொடக்க விழா பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் வழங்கும் பணியை துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தொடங்கி வைத்தாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 32 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் சாதனங்களை அவா் வழங்கினாா். பின்னா் நடைபெற்ற விழாவில் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் பேசியது:
சுழற்சங்கத்துடன் பெரியாா் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், அறிவுசாா் உதவி பல்கலைக்கழகத் தரப்பில் இருந்தும், பொருளாதார ரீதியிலான உதவி சுழற்சங்கம் சாா்பில் அளிக்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதுடன், வறுமையினால் கல்வி தடைபடாமல் இருக்கவும், பெரியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து கல்லூரிகளிலும் மாணவா் சுழற் சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சுழற்சங்க மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன், ஆளுநா் (தோ்வு) கே.சுந்தரலிங்கம், ஆளுநா் (பரிந்துரை) பி.சரவணன், மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.ஆதிசேஷன், ஆசிரியா் மேம்பாட்டுத் திட்ட மாவட்டத் தலைவா் ஆா்.வெங்கடாசலபதி, இணைத் தலைவா்கள் மனோகரன், கருணாகர பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.