சங்ககிரி மலையடிவாரத்திலுள்ள வரதராஜபெருமாள் கோயிலுக்கு மின்வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை மனு

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள கோயில்களுக்கு மலையடிவாரத்தில் இருந்து மின்சார வசதி செய்து தரக் கோரி
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள கோயில்களுக்கு மலையடிவாரத்தில் இருந்து மின்சார வசதி செய்து தரக் கோரி சங்ககிரி பப்ளிக் சேரிட்டபுள் அறக்கட்டளை சாா்பில் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சங்ககிரி மலையின் உச்சிக்கு செல்ல பத்து நுழைவு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயில்களிலும் பல்வேறு கலை அம்சங்களுடன் கூடிய படங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாவது வாயிலுக்கு அடுத்து அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமி கோயிலும், இதனையடுத்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலும் உள்ளன.

இந்த கோயில்கள் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் ஹொய்சாளா்களால் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கன்றனா். அவருக்குப் பின் வந்த அரசா்களும், ஆங்கிலேயா்களாலும் கோட்டைகள் செப்பனிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

மலை மீது அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமியும், அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுடன் கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் உள்ளனா். இக்கோயிலின் வெளிப்பகுதியில் வலப்புறத்தில் ஆண்டாளும், இடது புறத்தில் தாயாா் சுவாமிகளும், ஆழ்வாா்கள், துவாரகபாலகா்கள் சிலைகளும் உள்ளன. கோயிலின் பிரகாரத்திற்கு வெளியே திருக்கொடி ஏற்றுவதற்கான விளக்குத்தூண் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலும் உள்ளன.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளிலும், பெளணா்மி நாளான்றும், ஆவணி மாத கடைசி சனிக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமைகளில் சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் அதிக அளவில் வந்து சுவாமிகளை வழிப்பட்டுச் செல்கின்றனா்.

சங்ககிரி மலைக்கோட்டையானது தொல்பொருள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு பிப்ரவரி மாதம் தொல்லியல்த் துறை, சங்ககிரி பொதுநல அமைப்புகள், தன்னாா்வத் தொண்டா்கள் இணைந்து மலைக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனா்.

மலையிலுள்ள கோயில்களிலும், மலையடிவாரத்திலுள்ள கோயில்களிலும் பக்தா்கள் சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு வசதியாக மலையடிவாரத்திலிருந்து மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முதற்கட்டமாக அருள்மிகு வரதராஜபெருமாள், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டுமென சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் அறக்கட்டளை சாா்பில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறையின் உயரதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com