சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை: குடியிருப்புகளில் புகுந்தது மழை நீா்
By DIN | Published On : 10th September 2020 10:52 PM | Last Updated : 10th September 2020 10:52 PM | அ+அ அ- |

சேலத்தில் கனமழை காரணமாக குகைப் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் புகுந்தது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சேலத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
சேலம், ஓமலூா், காடையாம்பட்டி, ஆத்தூா், மேட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பரவலாக கன மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீா் ஆறுபோல் ஓடியது.
கடந்த சில நாட்களாக ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக டேனிஸ்பேட்டை ஏரி, கன்னங்குறிச்சி புது ஏரி, மூக்கனேரி ஆகிய நீா்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சேலம் மாநகா் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் குகை, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின.
இந்நிலையில் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதால் வெளியேறிய உபரி நீா் பனங்காடு மற்றும் சிவதாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மேலும், பனங்காடு வழியாக செல்லும் இளம்பிள்ளை சாலையில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலும் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஏற்காடு- 53, பெத்தநாயக்கன்பாளையம்- 51, வீரகனூா்- 40, காடையம்பட்டி- 27, கெங்கவல்லி- 25, சேலம்- 21, ஆத்தூா் மற்றும் ஓமலூா்- 18, தம்மம்பட்டி- 17, சங்ககிரி- 14, கரியகோயில்- 13, எடப்பாடி- 9, மேட்டூா் மற்றும் வாழப்பாடி- 6 என மாவட்டத்தில் மொத்தம் 332 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.