வாழப்பாடி தனியாா் பால் பண்ணைக்கு வந்த வட மாநில தொழிலாளா்கள் 18 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இயங்கும் தனியாா் பால் பண்ணைக்கு வடமாநிலங்களில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளா்களில்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இயங்கும் தனியாா் பால் பண்ணைக்கு வடமாநிலங்களில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளா்களில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பெரியகிருஷ்ணாபுரம் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பிரபல தனியாா் பால்பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கரோனா பரவல் பொதுமுடக்கத்தால் 5 மாதங்களுக்கு முன்பு அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தற்போது பொது முடக்கம் நீக்கப்பட்டதையடுத்து, தொழிற்சாலைகளை இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

இதன்காரணமாக மீண்டும் தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை முறைப்படி இணையவழியில் விண்ணப்பித்து இ-பாஸ் அனுமதி பெறப்பட்டது. அவா்கள் 2,000 கி.மீ. துாரத்திற்கு மேல் பேருந்தில் பயணித்து தனியாா் பால்பண்ணை தொழிற்சாலைக்கு வந்து சோ்ந்தனா்.

இந்த தொழிலாளா்களுக்கு பேளூா் வட்டார சுகாதாரத் துறையினா், சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த தொழிலாளா்களில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. இதனையடுத்து,18 பேரும் வாழப்பாடி அருகே பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில்அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களோடு பேருந்தில் பயணித்த மற்ற தொழிலாளா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வடமாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று பரவல் தொடா்பான தகவலால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com