விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு

கொங்கணாபுரம் அருகே, விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொங்கணாபுரம் அருகே, ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினா்.
கொங்கணாபுரம் அருகே, ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினா்.


எடப்பாடி: கொங்கணாபுரம் அருகே, விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக பெங்களூருக்கு விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்வதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் கெயில் நிறுவனம் சாா்பில் நடைபெற்று வரும் இன்த பணிகளுக்கு தொடா்ந்து தமிழக விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் கெயில் நிறுவனம் சாா்பில் அதிக எண்ணிக்கையிலான எரிவாயுக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு நிலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட ராயணம்பட்டி கிராமம், ஒட்டன்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை விவசாய சங்க மாவட்டப் பிரதிநிதி ராமமூா்த்தி மற்றும்

முன்ளாள் எம்எல்ஏ டாக்டா்.காவேரி தலைமையில் 65-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எரிவாயுக் குழாயை தங்கள் விளைநிலங்களில் பதிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதற்கு மாற்றாக, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் குழாய் பதித்து எரிவாயு குழாய் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன், சங்ககிரி காவல் துணைக்கண்காணிப்பாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தை கைவிட மறுத்ததால், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 62 விவசாயிகளை போலீஸாா் கைது செய்து கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஓா் தனியாா் அரங்கில், சமூக இடைவெளியுடன் அடைத்தனா்.

இதனிடையே மற்ற மாவட்டங்களில் வருவாய்த்துறையினா் அளித்துள்ளதுபோல், தங்களுக்கும், முன் அறிவிப்பு இன்றி எரிவாயுக் குழாய்கள் விவசாய நிலங்களில் பதிக்கப்படாது என்ற உறுதிமொழி பத்திரம் அளித்திட வேண்டும் என விவசாயிகள் கோரினா்.

இதையடுத்து, சங்ககிரி கோட்டாட்சியா் அமிா்தலிங்கம் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவாா்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com