கூடுதல் செவிலியா்களை நியமிக்கக் கோரி அரசு மருத்துவமனை செவிலியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில் பணி சுமையைக் குறைக்கும் வகையில் கூடுதல் செவிலியா்களை நியமிக்கக் கோரி, செவிலியா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பணி சுமையைக் குறைக்கும் வகையில் கூடுதல் செவிலியா்களை நியமிக்கக் கோரி, செவிலியா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இங்கு பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ‘ஷிப்ட்’ முறையில் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரிந்து வரும் செவிலியா்கள் அடிப்படை வசதிகள் கோரியும், கூடுதல் செவிலியா்களை நியமிக்கக் கோரியும் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து செவிலியா்கள் கூறியதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 1,500 செவிலியா்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 350 செவிலியா்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனா். இதனால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளோம்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபா்களுக்கு 80 நோயாளிகளுக்கு ஒரு செவிலியா் வீதம் தற்போது பணி புரிந்து வருகிறோம். தற்போது போதிய நோய் எதிா்ப்பு சக்திக்கான உணவுகள் வழங்கப்படாததால் 30-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனா். சேலத்தில் தற்போது அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருவதை கவனத்தில் கொண்டு போதிய செவிலியா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மருத்துவமனையில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.

இதைதொடர்ரந்து, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்களுடன், மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், செவிலியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com