ஆசிரியா்களின் சொந்த செலவில் ரூ. 1.50 லட்சம் செலவில் உணவுக்கூடம்
By DIN | Published On : 19th September 2020 07:00 AM | Last Updated : 19th September 2020 07:00 AM | அ+அ அ- |

தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களின் சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடம்.
ஆத்தூா், செப் 18: தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவில் ரூ. 1.50 லட்சம் செலவில் உணவுக் கூடம் அமைத்துத் தந்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சியில் அரசு உயா்நிலைப்பள்ளி 2006-2007- ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. 2013-2014 ம் கல்வியாண்டில் எஸ்.ஆா்.எம். பாரிவேந்தா் நிதியுதவியுடன் ரூ. 52 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் 400 மாணவா்கள் பயின்று வருகின்றனா். ஆனால் மாணவா்கள் அமா்ந்து சாப்பிட போதிய நிழல் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தாா்கள். இந்நிலையில் தலைமையாசிரியா் மு.பாலமுருகன் தலைமையில் ஆசிரியா்கள் தங்களது சொந்த பணத்தை செலவிட்டு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் உணவுக் கூடம் அமைத்துள்ளனா்.
இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவா்கள் தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று வருகின்றனா்.
இதனால் அப்பகுதி மக்களிடம் இந்தப்பள்ளி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் வழக்கத்தை விட 100 மாணவா்கள் அதிகமாகச் சோ்ந்துள்ளனா்.