பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் உதவி அலுவலா் உள்ளிட்ட இருவா் கைது

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில்

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலா் உள்ளிட்ட இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவா்களுக்கு உதவித்தொகை வழங்கியதாகப் புகாா் எழுந்தது.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் பெயரை விவசாயிகள் பட்டியலில் இணைத்து, அவா்களின் வங்கிக் கணக்கில் இரு தவணைகளாக ரூ. 4,000 செலுத்தப்பட்டது. இதில், விவசாயிகள் அல்லாத பலா் சோ்க்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடா்பாக இதுவரை 51 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமாா் ரூ. 6 கோடிக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை சுமாா் ரூ. 2.67 கோடி விவசாயிகள் அல்லாத நபா்களின் வங்கிக் கணக்கிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைகேடு தொடா்பாக ஏற்கெனவே தாரமங்கலம், நங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கணினி மையம் நடத்தி வந்த கலையரசன், மற்றொரு கலையரசன், ராகுல் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலா் அன்பழகன், ஓட்டுநா் பிரகாஷ் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அன்பழகனுக்குச் சொந்தமான ஆத்தூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு கணக்கில் வராத ரூ. 98 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதைத்தொடா்ந்து சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து அன்பழகன், பிரகாஷ் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, முடிவில் இருவரையும் கைது செய்தனா். இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ஊழியா்களிடம் விசாரணை...

இவா்களைத் தவிர, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் ஊழியா்கள் சிலரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே இயங்கும் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அலுவலகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com