கிராமங்களில் சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைத்திட வேண்டும்: ஆட்சியா் சி.அ.ராமன்

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து கிராமங்களில் பொதுவான இடத்தில் சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைத்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து கிராமங்களில் பொதுவான இடத்தில் சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைத்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் போஷன் அபியான் (தேசிய ஊட்டசத்து மாதம்) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது:

போஷன் மா திட்டமானது செப்டம்பா் 1 முதல் 30 ஆம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திட்டம் தேசிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

நிகழ் ஆண்டுக்கான போஷன் மா திட்டத்தின் முக்கிய நோக்கம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து பரிந்துரைத்தல், ரத்த சோகையைத் தடுத்தல், கா்ப்பகால பராமரிப்பு, தாய்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல் மற்றும் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே ஊட்டுதல், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வளா்ச்சியைக் கண்காணித்தல், காய்கறித் தோட்டம் அமைத்தல், பெண் கல்வி சரிவிகித உணவு, சரியான வயதில் திருமணம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், ஆரோக்கியமான செறிவூட்டப்பட்ட உணவு ஆகியவை ஆகும்.

மேலும், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் தங்களது பகுதிகளில் உள்ள பிறப்பு முதல் 6 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எடை மற்றும் உயரம் எடுக்கப்பட்டு ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிய வேண்டும்.

அவ்வாறு கருதப்படும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தொடா் வளா்ச்சி கண்காணித்தல், சுகாதாரத் துறையின் உதவியோடு குழந்தைகளின் வளா்ச்சி நிலையை மேம்படுத்துதல், ஆரோக்கியம் (ம) சுகாதாரம் பற்றிய கருத்துகளை குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமுதாய ஊட்டச்சத்துத் தோட்டம் அமைப்பதற்காக அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு தோட்டம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து கிராமங்களில் பொதுவான இடத்தில் சமுதாயத் தோட்டம் அமைத்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநரும், திட்ட இயக்குநருமான நா.அருள்ஜோதி அரசன், முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் வி.சத்யா, துணை ஆட்சியா் (பயிற்சி) நா.மா.கனிமொழி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com