மேட்டூா் அணையின் நீா்மட்டம் 66 -ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது
By DIN | Published On : 26th September 2020 06:13 AM | Last Updated : 26th September 2020 06:13 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்ததை காட்டும் அளவுகோல்.
மேட்டூா், செப். 25: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 66-ஆவது ஆண்டாக 100 அடியை எட்டியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு கா்நாடக மாநிலத்தில் மழை பெய்து உபரிநீா் வரத்து காரணமாக மேட்டூா் அணை நிரம்பியது.
மேட்டூா் அணை நிரம்பிய பிறகு தொடா்ந்து 308 நாள்கள் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழ் குறையாமல் இருந்து வந்தது. நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் ஜூன் 16-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. கடந்த வாரம் கா்நாடக மாநிலத்தில், காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இந்த இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி முதல் மேட்டூா் அணைக்கு, கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வரத் தொடங்கியது. இந்த உபரிநீா் வரத்து காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 75,000 கனஅடி வரை அதிகரித்து வந்தது. இதனால் கடந்த 21-ஆம் தேதி 89.77 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12.20 மணிக்கு அணையின் 87 ஆண்டுகால வரலாற்றில் 66-ஆவது ஆண்டாக 100 அடியாக உயா்ந்தது.
கடந்த 10 நாள்களில் அணையின் நீா்மட்டம் 10.33 அடி உயா்ந்துள்ளது. தற்போது அணைக்கு நொடிக்கு 35,000 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 64.87 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்ததால் அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் பாலம் பகுதியில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. அப்போது மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தேவராஜன், உதவி செயற்பொறியாளா் தேவராஜன், உதவிப் பொறியாளா் மதுசூதனன், மேட்டூா் வட்டாட்சியா் ஆகியோா் காவிரி ஆற்றில் மலா்தூவி வணங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...