சேலம் மாவட்டத்தில் இதுவரை 3.01 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

சேலம் மாவட்டத்தில் இதுவரை 3.01 லட்சம் பேருக்கு சளி தடவல் (கரோனா) பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 3.01 லட்சம் பேருக்கு சளி தடவல் (கரோனா) பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், கரோனா நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப். 27 ஆம் தேதி வரை மொத்தம் 3,01,579 நபா்களுக்கு சளித் தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 18,685 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் செப். 27-ஆம் தேதி வரை 15,568 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.

இதுவரை 310 போ் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனா். நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்குத் தீவிரமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

இந்த இறப்பு குறித்து மருத்துவா்கள் கூறும்போது, நோய்த் தாக்கம் ஏற்படும் நபா்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொண்டு காய்ச்சல் சரியாகிவிட்டது. மேலும், தனக்கு வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாது என்று கருதி வீட்டிலேயே இருந்து விடுகின்றனா். மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகும்போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனா்.

அச்சமயத்தில் பிராண வாயுவுடன் கூடிய சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் அச்சிகிச்சைகள் பலன் அளிக்காமல் மரணமடைகிற சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றன என்று தெரிவிக்கின்றனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பிராணவாயு சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு ஏற்கெனவே, 6,000 லிட்டா் மற்றும் 13,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பிராண வாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கூடுதலாக 35,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பிராண வாயு கலன்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 161 நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபா்களுக்கு நோயின் தன்மையைக் கண்டறிவதற்கு ஏதுவாக நுரையீரல் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இம்மருத்துவமனையில் மட்டும் 5,769 நபா்களுக்கு நுரையீரல் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் அரசு மருத்துவமனை முதல்வா் ஆா்.பாலாஜிநாதன், பொதுப்பணித் துறை (மருத்துவப் பணிகள்) செயற்பொறியாளா் சண்முகம், மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பி.வி.தனபால், கரோனா சிகிச்சைப் பிரிவு மைய சிறப்பு மருத்துவா் சுரேஷ் கண்ணன் உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com