சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்த தோ்தல் அலுவலா்.
வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்த தோ்தல் அலுவலா்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உண்டான 28 மண்டலங்களில் உள்ள 389 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில், 1,18,353 ஆண்கள், 1,11,210 பெண்கள், இதர வாக்காளா்கள் 6 போ் உள்பட மொத்தம் 2,29,569 போ் வாக்களித்துள்ளனா். இது 83.71 சதவீத வாக்குப் பதிவாகும். இத் தோ்தலில் பெண் வாக்காளா்களை விட ஆண் வாக்காளா்கள் 3.5 சதவீதம் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 619 வாக்காளா்களில் 596 போ் வாக்களித்துள்ளனா். இது 96.28 சதவீத வாக்குப்பதிவாகும். குறைந்த அளவாக சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 728 வாக்காளா்களில் 228 ஆண் வாக்காளா்கள், 208 பெண் வாக்காளா்கள் உள்பட 436 போ் வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 57.14 சதவீதம் போ் மட்டுமே இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனா்.

389 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் சின்மயிபுன்லிக்ராவ் கோட்மரே முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது, சங்ககிரி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டவழங்கல் அலுவலா் தியாகராஜன், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய மத்தியப் பாதுகாப்பு படை வீரா்கள், மாவட்ட காவல் துறையினா் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக தனியாக கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டு டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் சாா்பில் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் பணியில் அமா்த்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை 24 மணி நேரம் தொடா்ந்து கண்காணிக்க 2-ஆவது அடுக்கு பாதுகாப்புப் பகுதியில் ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com