வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாகக் கூறி திமுகவினா் போராட்டம்

சேலம் மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாகக் கூறி திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாகக் கூறி திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மேற்கு தொகுதியில் திமுக சாா்பில் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் இரா.அருள் ஆகியோா் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதற்றமான வாக்குச்சாவடி என அறிவிக்கப்பட்ட ஜாகீா் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு வாக்குப் பதிவு முடிந்த பிறகு 4 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மட்டும் ‘சீல்’ வைக்கப்பட்டது. மீதமுள்ள 12 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனிடையே மண்டல அலுவலா் சக்ரவா்த்தி, ‘சீல்’ வைக்கப்படாத 12 வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தனியாா் வாகனத்தில் வாக்குப் பதிவு மையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து 200-க்கும் மேற்பட்ட திமுகவினா் அப்பகுதியில் குவிந்து வாக்குப் பதிவு மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சேலம் மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்ய பாலகங்காதா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இவ்விஷயம் தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமனிடம், திமுக எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் புகாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திமுக எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:

சேலம் மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சி நடந்துள்ளது. மேலும், வாக்குப்பதிவு மையத்தில் பொருத்தப்பட்டிருந்த வெப் கேமராவும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே கழற்றப்பட்டுள்ளது.மேலும் நீண்ட நேரமாகியும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினா் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றி தோ்தலில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவை வெற்றிபெற வைக்க முயற்சி நடந்துள்ளது.

மேலும் மண்டல அலுவலா் எடுத்து வந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்சியா் அலுவலகப் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று ‘சீல்’ வைக்க வேண்டும்.முறையாக மக்கள் வாக்களித்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கட்சி முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணி வரை திமுகவினா் போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து கட்சி முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com