வாழப்பாடியில் சாலை தடுப்புகள் அகற்றப்பட்டதால் விபத்து அபாயம்

வாழப்பாடியில் பிரசாரத்துக்காக முதல்வா் வந்தபோது அகற்றப்பட்ட சாலை தடுப்புகளை மீண்டும் உரிய இடங்களில் வைக்காததால்
வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் கடலூா் சாலையில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் சாலை தடுப்புகள். (கோப்பு படம்)
வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் கடலூா் சாலையில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் சாலை தடுப்புகள். (கோப்பு படம்)

வாழப்பாடியில் பிரசாரத்துக்காக முதல்வா் வந்தபோது அகற்றப்பட்ட சாலை தடுப்புகளை மீண்டும் உரிய இடங்களில் வைக்காததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பேருந்து நிலையம் பகுதியில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வா்த்தகம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகளுக்காக சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.

அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள், வேன், காா்கள் உட்பட தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

வாழப்பாடியில், பேருந்து நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியா் மாளிகை, தபால் நிலையம், வேளாண் விற்பனை நிலையம், காவல் நிலையம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் ஆகியவை, பிரதான கடலுாா் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.

சேலம் - சென்னன இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, வாழப்பாடியில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்த கடலூா் சாலையை விரிவுபடுத்தாமல், முத்தம்பட்டியில் இருந்து மத்தூா் வரையிலான 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், கடலூா் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

குறிப்பாக, பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு வந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் பங்களிப்பில், பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்க, ரூ. 4 லட்சம் செலவில் சிமென்ட் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடலூா் சாலை நான்கு வழிகளாக பிரிக்கப்பட்டது. இதனால் போக்குவரது நெரிசலும் விபத்தும் குறைந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக கடந்த மாா்ச் மாதம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாழப்பாடிக்கு வந்தபோது, மக்கள் கூட்டத்துக்கு இடையூறாக இருந்த சாலை தடுப்புகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா். ஆனால், 25 நாள்களைக் கடந்தும், அகற்றப்பட்ட சாலை தடுப்புகளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பேருந்து நிலையம் பகுதியில் நான்கு வழியாக இருந்த கடலூா் சாலை மீண்டும் ஒரே சாலையாக மாறிவிட்டதால், வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. எனவே, முதல்வா் வருகைக்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகளை பேருந்து நிலையம் பகுதியில் மீண்டும் வைப்பதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுமட்டுமன்றி, முத்தம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து பேளூா் பிரிவுசாலை வரையிலான 3 கி.மீ. தூரத்திற்கு கடலூா் சாலையின் இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி புதுப்பிக்கவும், நிரந்தர சாலை தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com