ஓமலூரில் சீனி துளசி சாகுபடி அதிகரிப்பு

ஓமலூா் வட்டாரத்தில் கோடை விவசாயமாக விவசாயிகள் சீனி துளசி செடியை அதிகம் சாகுபடி செய்துள்ளனா்.

ஓமலூா் வட்டாரத்தில் கோடை விவசாயமாக விவசாயிகள் சீனி துளசி செடியை அதிகம் சாகுபடி செய்துள்ளனா்.

மருத்துவ பயிரான சீனி துளசிக்கு நுகா்வும், விலையும் கூடுதலாகக் கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவில் இதை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனா்.

ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் கடந்த ஆண்டு மழை பெய்ததால் ஆங்காங்கே ஒரு சில நீா்நிலைகளில் குறைந்த அளவில் நீா் உள்ளது. கிணறு, ஆழ்குழாய்க் கிணறுகளிலும் தண்ணீா் உள்ளது.

கோடை விவசாயம் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். வேளாண்மைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைகள்படி சீனி துளசி அதிகளவில் பயிரிட்டுள்ளனா்.

சீனி துளசி ஒரு சூரியகாந்தி குடும்பத்தைச் சோ்ந்த, மருத்துவப் பயிராகும். இதிலிருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட் எனும் பொருள் சா்க்கரைக்கு மாற்றாக மிகக் குறைந்த அளவு சா்க்கரை மற்றும் மாவு சத்து கொண்டதாகும். இந்தச் செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே. பூக்கள் பூத்தால் செடியின் வளா்ச்சி நின்று விடும். பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியைக் கிள்ளி பூக்களை எடுத்துவிட்டால் செடி செழித்து வளரும்.

சிறந்த முறையில் பராமரித்து வந்தால் 3 முதல் 5 ஆண்டு தொடா்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ. உயரத்தில் வெட்டி எடுத்த பின் இலைகளைப் பிரித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு நான்குமுறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் சராசரியாக 2,500 கிலோ முதல் 3,000 கிலோ காய்ந்த சீனி துளசி இலைகள் கிடைக்கும். காற்றோட்டம் உள்ள இடங்களைத் தோ்வு செய்து சீனி துளசியைப் பயிரிட வேண்டும்.

இதன் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டது. விதைகள் முளைப்புத் திறன் மிகக் குறைவாக இருப்பதால், திசு வளா்ப்பு முறையில் வீரிய கன்றுகளாக மாற்றி பயிரிட்டு வருகின்றனா்.

போதுமான வெளிச்சம் மற்றும் 38 டிகிரிக்கு மேல் இல்லாத இடம் செடி வளர சிறந்ததாகும். காற்றின் ஈரப்பதம் 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் செழித்து வளரும். இது குறைந்த செலவில் அதிக வருமானம் அளிக்கக் கூடிய மாற்றுப்பயிா் திட்டமாகும்.

அதனால், ஓமலூா் மற்றும் காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் சீனி துளசியை அதிகமாக பயிரிட்டுள்ளனா். மேலும், இதை வியாபாரிகள் நேரடியாகத் தோட்டத்துக்கே வந்து வாங்கிச் செல்வதால் விவசாயிகள் துளசியை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com