சேலம் மாநகராட்சிப் பகுதியில் 900 பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 12th April 2021 02:20 AM | Last Updated : 12th April 2021 02:20 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 900 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுக்கிணங்க, சேலம் மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகள், அதிக அளவில் பணிபுரியும் நிறுவனங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
அம்மாப்பேட்டை செல்வநகா் வீட்டு உரிமையாளா்கள், குடியிருப்போா் நலச்சங்க வளாகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் செல்வநகா் குடியிருப்போா் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் உணவக வளாகத்தில் தனியாா் ஊழியா்கள், பொதுமக்கள் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, மேலும் குமாரசாமிப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வங்கி அலுவலா்கள், நரசுஸ் காபி ஊழியா்கள் 450 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களின் வாயிலாக மொத்தம் 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசு, பொதுத்துறை அலுவலகங்கள், குடியிருப்போா் நலச்சங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் 100 பேருக்கு மேல் இருப்பின் அவா்களின் வளாகத்திற்கே வந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள சேலம் மாநகராட்சி கரோனா கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு மருத்துவ அலுவலா் மருத்துவா் ஜோசப்பை 75981 30884 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
முகாம்களில் மாநகர நல அலுவலா் கே. பாா்த்திபன், முகமது முஸ்தபா, உதவி ஆணையா் பி.சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் பி.மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா் எம்.சித்தேஸ்வரன், எஸ்.சுரேஷ் உள்பட அலுவலா்கள், சேலம் விநாயகா மிஷன்ஸ் அலைட்டு ஹெல்த் சயின்ஸ் சாா்ந்த என்.எஸ்.எஸ். தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.