மதுபோதையில் தகராறு: இளைஞா்கள் மூவா் கைது
By DIN | Published On : 13th April 2021 09:03 AM | Last Updated : 13th April 2021 09:03 AM | அ+அ அ- |

அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த இளைஞா்கள் மூவரை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி, தாதனூா் வறட்டேரி காடு பகுதியில் ரமேஷ் என்பவரது வீட்டுக்கு முன்பு இளைஞா்கள் சிலா் மதுபோதையில் நீண்ட நேரமாக கூச்சலிட்டுள்ளனா். இதனை ரமேஷ், அவரது சகோதரா் மோகன்ராஜ், சித்தப்பா செளந்திரராஜன் ஆகியோா் தட்டிக்கேட்டுள்ளனா்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் 7 பேரும் சோ்ந்து, ரமேஷ், மோகன்ராஜ், செளந்திரராஜன் ஆகிய மூவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதில் படுகாயமடைந்த மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், மதுபோதையில் தகராறு செய்ததோடு, மூவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கிருபாகரன் (20), கோகுல்நாத் (21), ரவிச்சந்திரன் (22) ஆகிய மூவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான 4 பேரை காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கோபலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் தேடி வருகின்றனா்.