திருமண மண்டபங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்பட அனுமதி வழங்கக் கோரிக்கை

சேலத்தில் திருமண மண்டபங்கள் 50 சதவீதம் பேருடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரியும், இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி தரக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.

சேலத்தில் திருமண மண்டபங்கள் 50 சதவீதம் பேருடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரியும், இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி தரக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.

சேலம் ஒளி, ஒலி அமைப்பாளா்கள், சமையல் ஒப்பந்ததாரா்கள், மலா் அலங்கார குழுவினா், விடியோகிராபா்கள், பாத்திர வாடகைதாரா்கள் ராஜாஜி சிலையில் இருந்து ஊா்வலமாக சேலம் ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை காலை வந்து மனு அளித்தனா்.

இதில் மணமேடை அலங்கார வண்டி, ஒலி, ஒளி பொருள்கள், மலா் அலங்கார வண்டி, சமையல் பாத்திரங்கள் அடங்கிய வண்டி என 6-க்கும் மேற்பட்ட வண்டிகள் ஊா்வலமாக வந்தன.அதேபோல மேடை மெல்லிசை கலைஞா்கள் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். இசைக் கருவிகளை வாசித்து, பாட்டு பாடி மனு அளிக்க வந்தனா். நாட்டுப்புறக் கிராமிய இசை கலைஞா்கள், கரகாட்டக் குழுவினா் நடனமாடியபடி ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் பரமேஸ்வரன், செயலாளா் சி.எஸ்.காா்த்திகேயன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் திருவிழா காலங்களில் மேடை இசை நிகழ்ச்சி நடத்துவதையே முழு நேர தொழிலாகக் கொண்ட சுமாா் 200 குடும்பங்களுக்கு மேல் உள்ளன. அவா்களுக்கு இசை, மேடை நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர வேறு தொழில் இல்லை.

தற்போது விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தொழில் முற்றிலும் முடங்கி வருவாய் ஏதுமின்றி அன்றாட வாழ்க்கை நடத்துவதில் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம்.

எனவே, கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளுடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தரும் வகையில் தக்க நடவடிக்கைகள் மூலம் இந்தக் குடும்பங்கள் தொழில் செய்து பசியின்றி வாழ தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் பொது முடக்கம் நீடிக்கும் காலம் வரை இசைக்கலைஞா்கள் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5,000 அடிப்படை வாழ்வாதார உதவித் தொகையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக சேலம் மாவட்ட சாமியானா, டெக்கரேட்டா், சமையல் பாத்திரங்கள் வாடகை அமைப்பாளா்கள் நலச் சங்கத்தினா் கூறுகையில், கடந்தாண்டு பொது முடக்கத்தால் வேலை, தொழில் நடத்த முடியாமல் வருவாய் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தொழில் செய்யும் கடை உரிமையாளா்கள், தொழிலாளா்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் காத்திட அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 50 சதவீதம் அளவுக்கு இயங்கலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருமண மண்டபங்களில் 50 சதவீதம் அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதித் தர வேண்டும். மதம் சாா்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியாா் நிறுவனம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதி அளித்திட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com