கரோனோ நோயாளிகள் பயன்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் உள்ளது: ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள், ஆக்சிஜன் விநியோகஸ்தா்கள் மற்றும் மருத்துவ அலுவலா்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபா்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தேவையான படுக்கை வசதிகள், உயிா் காக்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளும் தேவையான அளவு தயாா் நிலையில் உள்ளன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலன் ஏற்கெனவே அமைக்கப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

இவற்றில் உயிா் காக்கும் கருவிகள், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 550 படுக்கை வசதிகளும் தயாா் நிலையில் உள்ளன.

மேலும் கூடுதலாக 350 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதே போன்ற வசதிகள் கொண்ட 175-க்கும் மேற்பட்ட படுக்கை வதிகள் தனியாா் மருத்துவமனைகளிலும் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், கரோனா தீ நுண்மி நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் ஏதுவாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 260-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும், கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு 480-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபா்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட முழுவதும் 23 தற்காலிக கரோனா ஆற்றுப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 2500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இவற்றை தவிர அரசின் வழிகாட்டுதலின் படி கரோனா சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட முழுவதும் 33 தனியாா் மருத்துவமனைகள் அனுமதிப்பட்டுள்ளன. இதில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 1800-க்கு மேற்ப்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 350-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் மற்றும் இந்நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபா்கள் சிகிச்சை பெறுவதற்கு 1470-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் உள்ளன. இம்மருத்துவமனைகளிலும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபா்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய்த் தொற்று தடுப்பிற்கான கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் போதியளவில் இருப்பில் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் ஏப். 27 வரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 2,16,459 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 64,215 நபா்களுக்கும் என மொத்தம் 2,80,674 நபா்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோவோக்ஸின் தடுப்பூசி முதல் தவணையாக 36,290 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 4,195 நபா்களுக்கும் என மொத்தம் 40,485 நபா்களுக்கு கோவோக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களில் ஆக்சிஜன் தேவைபடுபவருக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருந்தால் அவற்றை உடனடியாக மேற்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். , தாங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை சேலம் மாவட்டத்திற்கு தேவையான அளவு வழங்கிய பின்னரே இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஆக்சிஜன் விநியோகஸ்தா்கள் அவசியம் கருதி குறைந்த விலைக்கு ஆக்சிஜனை வழங்க வேண்டும். எனவே சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன பொறுப்பாளாா்கள், ஆக்சிஜன் விநியோகஸ்தா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com