வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கரோனா பரிசோதனை முகாம்

சேலத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், அரசியல் கட்சி முகவா்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சேலத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், அரசியல் கட்சி முகவா்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், 4 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன.இதில் 11 தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 154 மேசைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வாக்கு எண்ணும் பணிகளில் ஒரு மேசைக்கு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் உள்ளிட்ட மொத்தம் 594 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 2,190-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.இதனிடையே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோரும் உடனிருக்க அனுமதி இருப்பதால், அவா்களும் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையங்களிலும் பணியாற்றவுள்ள பணியாளா்களுக்கு, அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சாா்பில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மேற்குத் தொகுதிக்கு சேலம் வட்டார அலுவலகத்திலும், வீரபாண்டி தொகுதிக்கு உத்தமசோழபுரத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலகத்திலும், சேலம் தெற்குத் தொகுதிக்கு சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் கரோனா தொற்றுக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியாளா்கள் தவிர, வேட்பாளா்களின் முகவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்றும், அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தி சான்றிதழை பெற்று வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com