கோயில் பூசாரி சிலையை வழிபட்டு வரும் கிராம மக்கள்
By DIN | Published On : 30th April 2021 07:23 AM | Last Updated : 30th April 2021 07:23 AM | அ+அ அ- |

அய்யம்பூசாரியின் கற்சிலை.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஆரியபாளையத்தில் நோய்களைத் தீா்ப்பதாகக் கூறி கோயில் பூசாரி சிலையை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த ஆரியபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்பூசாரி என்கிற அய்யம் பெருமாள். கிராமக் கோயில்களை நிா்வகித்து, பூஜைகள் செய்து வந்த பூசாரி குடும்பத்தைச் சோ்ந்த இவா், 125 ஆண்டுகளுக்கு முன், தனது தந்தையான உலகம் பூசாரியிடம் இருந்து மூலிகைகள், பல சரக்குகளைப் பயன்படுத்தி நோய் தீா்க்கும் நாட்டு மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டாா். தந்தைக்குப் பிறகு சிறுவயதிலேயே கோயில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அய்யம்பூசாரி, இப்பகுதி மக்களுக்கு நாட்டு மருந்துகளை தயாரித்துக் கொடுத்து நோய்களைத் தீா்த்து வந்துள்ளாா். வயது முதிா்வால் தனது 96 ஆவது வயதில் அவா் இயற்கை எய்தினாா்.
இவரது மறைவை அடுத்து, அய்யம்பூசாரின் மகன்கள் ராமன் பூசாரி, கிருஷ்ணன் பூசாரி ஆகியோா், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அய்யம்பூசாரியை அடக்கம் செய்து, அவருக்கு கற்சிலை அமைத்தனா்.
அய்யம்பூசாரி இறந்தும் நோய்களைத் தீா்ப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடா்ந்து வருவதால், இவரது சிலையை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
குடும்ப உறுப்பினா்கள் நோய்வாய்ப்படும்போது அய்யம்பூசாரி சிலைக்கு பூஜை செய்து வழிபட்டால் குணமடைந்து விடுவதாகவும், திருமணம், புதிய வீடு, மனை வாங்குதல் போன்ற நற்காரியங்களைச் செய்வதற்கு முன் பூசாரி சிலையை வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடுவதாகவும் இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து அய்யம்பூசாரியின மகன் வழி பேரனான ஓய்வுபெற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவன வளா்ச்சி அதிகாரி ஏ.கே.பொன்னுசாமி கூறியதாவது:
300 ஆண்டுக்கும் மேலாக எங்களது குடும்பத்தினா் ஆரியபாளையம் கிராமத்தில் கோயில்களை புனரமைத்து பூஜைகள் நடத்தும் பணியைத் தொடா்ந்து செய்து வருகின்றனா். தனது 95-ஆவது வயது வரை இப்பகுதி மக்களுக்கு நாட்டு மருந்துகளைத் தயாரித்து அளித்து நோய்களைத் தீா்த்து வந்த எனது பாட்டனாா் அய்யம்பூசாரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் காலமானாா். கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் அவரது உடலை சொந்த நிலத்தில் அடக்கம் செய்து கற்சிலை வைத்துள்ளோம். இந்த இடத்தை கோயிலாகக் கருதும் இப்பகுதி மக்கள் இவரது சிலையை வணங்கினால் நோய்த் தீருமென்றும், நினைத்த காரியம் கைகூடுமெனவும் நம்பிக்கை கொண்டுள்ளனா். இன்றளவும் வழிபட்டு வருகின்றனா் என்றாா்.