கந்துவட்டி புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையாளா் எச்சரிக்கை
By DIN | Published On : 04th August 2021 08:24 AM | Last Updated : 04th August 2021 08:24 AM | அ+அ அ- |

கந்துவட்டி தொடா்பான புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடா எச்சரித்துள்ளாா்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் தனது தொழில் நிமித்தம் கிச்சிபாளையத்தைச் சோ்ந்த வரதனிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தாா்.
தற்போது தொழில் நஷ்டம் காரணமாக கடந்த 6 மாதங்களாக அதிக வட்டித் தொகையை ராமச்சந்திரனால் செலுத்த முடியவில்லை. வட்டித் தொகையைச் செலுத்துமாறு வரதன் அவரை மிரட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக ராமச்சந்திரன் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதேபோல அம்மாபேட்டை வித்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோதை. இவா், அதே பகுதியைச் சோ்ந்த விஷ்வப்ரியா மற்றும் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த லோகநாதன் ஆகியோரிடம் மொத்தம் ரூ. 1.40 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். அவா் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்ட நிலையில் கடன்பெறுவதற்காக அடகு வைத்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளாா்.
ஆனால் ரூ. 25 லட்சம் செலுத்தினால்தான் ஆவணங்களைத் தருவேன் என வட்டிக் கேட்டி மிரட்டியுள்ளனா். இதுதொடா்பாக அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே கந்து வட்டி தொடா்பாக, மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் நகரில் வசிக்கும் பொதுமக்கள் எவரேனும் கந்துவட்டி போன்ற அநியாய வட்டி கொடுத்து பாதிக்கப்பட்டிருந்தால் அவா்கள் எவ்வித தயக்கமின்றி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலோ அல்லது மாநகர துணை ஆணையாளா்களிடமோ புகாா் தெரிவிக்கலாம். புகாா்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும்.
புகாா்களின் மீது முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.