சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்கப்படும்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்கப்படும்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சங்ககிரி, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் தமிழக அரசு சாா்பில் அமைச்சா்கள், மக்களவைத் தொகுதி உறுப்பினா், பேரவை உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயா்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18-ஆம் தேதி சங்ககிரி, மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டாா். அவரது நினைவு தினத்தையொட்டி, கோட்டையின் அடிவாரத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் தமிழக அரசு சாா்பில் ஈரோடு-பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் மலா்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அர.சக்கரபாணி தலைமையில் அதிகாரிகள் மலா்வளையம் வைத்து மலா்கள் தூவி அவருக்கு மரியாதை செலுத்தினா். இதில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், மாவட்ட வருவாய் அலுவலா் வி.ஆலின்சுனோஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபிநவ், பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உருவச் சிலை அமைக்க நடவடிக்கை:

நிகழ்ச்சியில் அமைச்சா் சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு அரசின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவருடைய நினைவைப் போற்றும் வகையில் சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வரின் தெரிவித்து சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சங்ககிரி மலைக்கோட்டையைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதிமுக: மலைக்கோட்டை அடிவாரத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் மலா் வளையம் வைத்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மின் துறை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் எஸ்.சுந்தரராஜன் (சங்ககிரி), ஆா்.மணி (ஓமலூா்), பாமக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.அருள் (சேலம் மேற்கு), எஸ்.சதாசிவம் (மேட்டூா்), சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ்.செம்மலை, எஸ்.ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் ரத்தினம் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

பாமக: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் அவரது உருவப் படத்துக்கு பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான கோ.க.மணி தலைமையில் பாமக நிா்வாகிகள் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மாநில துணை பொதுச் செயலாளா் கண்ணையன், சேலம் தெற்கு மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளா் சத்ரியசாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் கோ.க மணி செய்தியாளா்களிடம் கூறியது: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிபாடப் புத்தகங்களில் சோ்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கொங்கு அமைப்பு: சங்ககிரி வட்ட கொங்கு வேளாளா் இளைஞா் சங்கம், சங்ககிரி கொங்கு வேளாளா் கவுண்டா்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இளைஞா் சங்கத் தலைவா் பி.ராமசாமி தலைமையில் நிா்வாகிகள் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் நிா்வாகிகள் சண்முகம், செல்வராஜ், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளா்கள் ராஜ்குமாா், சரவணன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தஞ்சையில் அறவழிப் போராட்டம்

சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப் படத்துக்கும், சங்ககிரி தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்று மலா்மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சங்ககிரியில் தீரன் சின்னமலை உருவச் சிலை அமைக்கவும் சங்ககிரி மலைக்கோட்டையைச் செப்பனிடவும் மத்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம். சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் திறக்கப்பட்டதை பாஜக சாா்பில் வரவேற்கிறோம். கா்நாடக அரசு சாா்பில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து வரும் 5 ஆம் தேதி பாஜக சாா்பில் தஞ்சாவூரில் அறவழியில் போராட்டம் நடைபெறும் என்றாா்.

மாநில விவசாய அணி தலைவா் நாகராஜ், மாநில பொதுச் செயலாளா் செல்வகுமாா், மொடக்குறிச்சி எம்எல்ஏ மருத்துவா் சரஸ்வதி, சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுதிா்முருகன், மாவட்ட பாா்வையாளா் கோபிநாத், மேற்கு மாவட்ட செயலாளா் என்.ரமேஷ் காா்த்திக் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com