வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: விவசாயிகள் தில்லி பயணம்
By DIN | Published On : 04th August 2021 08:33 AM | Last Updated : 04th August 2021 08:33 AM | அ+அ அ- |

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேலத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினா் மற்றும் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகள் தில்லிக்கு பயணம் மேற்கொண்டனா்.
இதன் ஒரு பகுதியாக சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் ராமமூா்த்தி தலைமையில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனா்.
தமிழகத்திலிருந்து செல்லும் விவசாயிகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வா் எனத் தகவல் தெரிவித்தனா். முன்னதாக ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.