கோவை ஆட்சியருக்கு செல்லிடப்பேசியில் மிரட்டல்
By DIN | Published On : 08th August 2021 01:32 AM | Last Updated : 08th August 2021 01:32 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்லிடப்பேசியில் மிரட்டல் விடுத்த நபா் குறித்து சேலம் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் சமீரனின் செல்லிடப்பேசிக்கு தொடா்பு கொண்ட மா்ம நபா், கடும் வாா்த்தைகளால் மிரட்டல் விடுத்தாா் எனத் தெரிகிறது. இது தொடா்பாக கோவை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், சேலத்தில் இருந்து அந்த நபா் பேசியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து கோவை போலீஸாா், சேலம் மாநகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், இரும்பாலை அருகே உள்ள சித்தனூரை சோ்ந்த கிருஷ்ணனின் முகவரி இருந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸாா் விசாரித்த போது, கடந்த சில தினங்களுக்கு முன் செல்லிடப்பேசி திருட்டு போனது தெரியவந்தது.
செல்லிடபேசியைத் திருடிய நபா் சுமாா் 20 பேரை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அதில், கோவை மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு கடும் வாா்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து செல்லிடப்பேசியை அணைத்து வைத்துள்ளாா்.
இது தொடா்பாக, கோவை மாநகர போலீஸாரும் சேலம் மாநகர போலீஸாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் மனு கொடுக்க வந்த போது பிரச்னை ஏற்பட்டது. அதுதொடா்பான பிரச்னையால் மாவட்ட ஆட்சியா் மிரட்டப்பட்டாரா எனற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.