‘68,099 குடும்ப அட்டைகளில் பெண் குடும்பத் தலைவராக மாற்றலாம்’
By DIN | Published On : 08th August 2021 01:39 AM | Last Updated : 08th August 2021 01:39 AM | அ+அ அ- |

முன்னுரிமை குடும்ப அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 68,099 குடும்ப அட்டைகள் பெண் குடும்பத் தலைவராக மாற்றம் செய்யலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (பி.எச்.எச்.) வைத்துள்ளவா்களின் எண்ணிக்கை 4,78,489 ஆகும். இதில் பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகள் 4,22,506 ஆகும். மீதம் 54,126 குடும்ப அட்டைகளில் ஆண்கள் குடும்பத் தலைவராக உள்ளனா்.
இதே போல் (ஏ.ஏ.ஒய்.) அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டைகள் 79,793 ஆகும். இதில் பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 65,462 ஆகும். ஆண்கள் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகள் 13,973 ஆகும்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் மேற்காணும் ஆண் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகளை பெண் குடும்பத் தலைவராக மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னுரிமை குடும்ப அட்டைகள் (பி.எச்.எச்.), அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.) திட்டத்தின் கீழ் ஆண் குடும்பத் தலைவராக கொண்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் மேற்கண்ட 68,099 குடும்ப அட்டைதாரா்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலோ அல்லது அவா்களுக்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்துக்கோ சென்று பெண் குடும்பத் தலைவராக மாற்றம் செய்ய மனு செய்யலாம்.
அவ்வாறு மனு செய்ய தேவையான ஆவணங்கள் ஏற்கெனவே உள்ள மின்னணு குடும்ப அட்டை, அக்குடும்பத்தில் உள்ள 18 வயது நிறைவடைந்த பெண் உறுப்பினருடைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.