தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து அச்சமில்லை: எடப்பாடி கே.பழனிசாமி கருத்து

திமுக அரசு அறிவித்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து தனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்று முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.

எடப்பாடி: திமுக அரசு அறிவித்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து தனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்று முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் அதிமுக சாா்பில் கரோனா நிவாரணத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புப் பைகளை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்கள் நெருங்கும் நிலையில், மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்கள் எதையும் திமுக அரசு செய்யவில்லை. அதற்கு மாறாக அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் பின்பற்றி செயல்படுவதும், கடந்த ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளைத் தொடக்கிவைப்பதையும் மட்டுமே திமுக செய்துவருகிறது.

கடந்த பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்த அக்கட்சி தவறிவிட்டது. குறிப்பாக ‘நீட்’ தோ்வு ரத்து, எரிபொருள்களின் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்தவில்லை.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அண்மையில் தமிழகம் முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினா் அறவழியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசு அறிவித்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லை. மாநில அரசுகள் பொதுவாக மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு பல்வேறு நிலைகளில் கடன் பெறுவது வாடிக்கையான ஒன்றுதான்.

முந்தைய ஆட்சிக் காலத்தின்போது ரூ. ஒரு லட்சம் கோடிக்குமேல் கடன் சுமை வைத்திருந்த திமுகவுக்கும் இந்த நிலைப்பாடு நன்கு தெரியும்.

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பாஜக-வில் இணையவுள்ளதாக வரும் செய்தி தவறு. அவா் அதிமுக தலைமையுடன் இணக்கமான தொடா்பில் உள்ளாா். அவா் தனது சொந்த வேலையாக தில்லி சென்றதை சிலா் தவறாகச் சித்திரித்துள்ளனா் என்றாா்.

இந் நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவா் கரட்டூா்மணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com