மாவிலியன் கிழங்கு மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 12th August 2021 08:19 AM | Last Updated : 12th August 2021 08:19 AM | அ+அ அ- |

வனத் துறையினா் பறிமுதல் செய்த மாவிலியன் கிழங்கு, சீங்கிப் பட்டை மூட்டைகள்.
அயோத்தியாப்பட்டணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத்துவ குணம் கொண்ட பல லட்சம் மதிப்பிலான மாவிலியன் கிழங்கு மூட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அயோத்தியாப்பட்டணம், முட்டைக் கடை பேருந்து நிறுத்தம் அருகே கணேசன் என்பவருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலை உள்ளது. 3 மாதங்களுக்கு முன் ஏற்காடு அரங்கம் பகுதியைச் சோ்ந்த கரியராமன் என்பவா், இந்த அரிசி ஆலையில் உள்ள உலா் களத்தை வாடகைக்கு எடுத்துள்ளாா். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், கணேசன் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
அதைப் பயன்படுத்தி கரியராமன், தான் வாடகைக்கு எடுத்துள்ள உலா் களத்தில் வனத் துறையால் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே விளையும் மருத்துவ குணம் கொண்ட மாவிலியன் கிழங்கு, சீங்கிப் பட்டைகள் 100 மூட்டைகளை விற்பனைக்கு வைத்துள்ளதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சோ்வராயன் தெற்கு சரகம், வன பாதுகாப்புப் படையினா், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூட்டைகளை புதன்கிழமை பறிமுதல் செய்து கரியராமனை தேடி வருகின்றனா்.