மேட்டூா் அணை நீா்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரா் ஆலய நந்தி சிலை
By DIN | Published On : 17th August 2021 09:26 AM | Last Updated : 17th August 2021 09:26 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்ததால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரா் ஆலய நந்தி சிலையின் முகப்பு வெளியே தெரிகிறது.
மேட்டூா் அணை கட்டப்பட்டபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு பகுதியில் குடியமா்த்தப்பட்டனா். கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் போது தங்களது வழிபாட்டுத் தலங்களை அப்படியே விட்டுச் சென்றனா். எனவே அணையின் நீா்மட்டம் 80 அடிக்கு கீழாகக் குறையும் போது பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரமும், 70 அடிக்குக் கீழாகச் சரியும் போது அதே பகுதியில் உள்ள பழமையான ஜலகண்டேஸ்வரா் ஆலயத்தின் நந்தி சிலையும் வெளியே தெரியும்.
அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகக் குறைந்தால் கீரைக்காரனூா் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரபத்திரன் கோயிலும், நீா்மட்டம் 40 அடிக்கும் கீழாகச் சரிந்தால் மீனாட்சி அம்மன் கோயில் வெளியே தெரியும். திங்கள்கிழமை மேட்டூா் அணை நீா்மட்டம் 69 அடியாகச் சரிந்ததால் ஜலகண்டேஸ்வரா் ஆலய முகப்பில் உள்ள நந்தி சிலையின் தலைப் பகுதி நீருக்கு வெளியே தெரிகிறது. இதனைப் பாா்க்க ஏராளமானோா் வந்து செல்வதால் வெறிச்சோடிக் காணப்பட்ட பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.