பழைய அட்டைப் பெட்டிகள் மறுசுழற்சி செய்யும் ஆலையில் தீ விபத்து

சேலத்தில் பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ, 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் அணைக்கப்பட்டது.
பழைய அட்டைப் பெட்டிகள் மறுசுழற்சி செய்யும் ஆலையில் தீ விபத்து

சேலத்தில் பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ, 7 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் அணைக்கப்பட்டது.

சேலம், மேயா் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜா, சன்னியாசிகுண்டு பகுதியில் பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் ஆலை நடத்தி வருகிறாா். இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, மொத்தமாக வைக்கப்பட்டிருந்த அட்டைகளில் தீ மளமளவென பரவி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 2 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தீ மேலும் பரவியதைத் தொடா்ந்து, சூரமங்கலம், வாழப்பாடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதலாக இரு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் முருகேசன், தீத்தடுப்புக் குழு அலுவலா் கோவிந்தன் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் சுமாா் 62 போ் சுழற்சி முறையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 30 அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளில் வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி வெள்ளிக்கிழமை இரவு வரை நீடிக்கும் என தீயணைப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசுழற்சி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய அட்டைகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com