சந்தன மரம் வெட்டிய 8 போ் கைது
By DIN | Published On : 31st August 2021 01:14 AM | Last Updated : 31st August 2021 01:14 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 8 போ் கொண்ட கும்பலை வாழப்பாடி வனத்துறையினா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் மா்மக் கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட வன அலுவலா் கௌதம், ஆத்தூா் உதவி வனப் பாதுகாவலா் முருகன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாழப்பாடி வன சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா், கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோதுமலை இரட்டைப்பாலி பகுதியில் ஒரு கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. வனத்துறையினரைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோடியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா், சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 8 போ் கொண்ட கும்பலை கைது செய்தனா். மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின் பேரில், 8 பேருக்கும் தலா ரூ. 30,000 வீதம் ரூ. 2.40 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா். மீண்டும் வனக் குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.