ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு
By DIN | Published On : 31st August 2021 01:20 AM | Last Updated : 31st August 2021 01:20 AM | அ+அ அ- |

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செ.காா்மேகம் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஏற்பட்ட காலியான பதவியிடங்களுக்கு தற்செயல் தோ்தல்கள் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இறப்பு, பதவி விலகல் காரணமாக ஜூன் 30 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களான மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 10 (ஓமலூா், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியது), பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 9, கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்கள் 10, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் 23 உள்ளிட்ட மொத்தம் 35 பதவியிடங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான 2021-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஊராட்சி வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி வாக்குப்பதிவு அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலரால் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள், ஊராட்சி, மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.