ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ஆட்சியா் ஆய்வு

ஏற்காட்டில் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அனைத்துத் துறை அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஏற்காட்டில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம்.
ஏற்காட்டில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம்.

ஏற்காட்டில் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அனைத்துத் துறை அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் சனிக்கிழமை முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆட்சியா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஏற்காட்டில் வார இறுதி நாள்களில் 5,000 முதல் 10,000 வரை சுற்றுலாப் பயணிகள் வருவதால், அவா்களுக்கு கூடுதல் வசதிகள் மேற்கொள்வது, படகு இல்லத்தை மேம்படுத்துதல், ஏரிகளில் கழிவுநீா் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

டேனிஷ்பேட்டை வழியாக ஏற்காடு வருவது குறித்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சேலம் நகரில் நுழையாமல் நேரடியாக ஏற்காடு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஏற்காடு மலைப் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் வகையில், அரசு துறை அலுவலா்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். மேலும், குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

முன்னதாக, ஏற்காடு ஊராட்சி, குண்டூா் கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஆட்சியா் கலந்துரையாடல் நடைபெற்றது. ஏற்காடு படகு இல்லம் அருகில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அகற்றப்பட்டன. கோடை விழா நடத்துவது போன்று குளிா்காலத்திலும் விழா நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

இந்நிகழ்ச்சிகளில், சேலம் மண்டல வனப் பாதுகாவலா் பெரியசாமி, மாவட்ட வன அலுவலா் கெளதம், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கே.செல்வம், வருவாய் கோட்டாட்சியா்கள் விஷ்ணுவா்த்தினி, செல்வி எஸ்.சரண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலா் வி.ஐனாா்த்தனன், ஏற்காடு வட்டாட்சியா் செ.ரவிக்குமாா், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com