முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மின்மயம்: சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்
By DIN | Published On : 29th December 2021 09:13 AM | Last Updated : 29th December 2021 09:13 AM | அ+அ அ- |

சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கெளதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தாா்.
சேலம்-விருத்தாசலம் இடையிலான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மொத்தம் 136 கிலோ மீட்டா் தூரத்திற்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.200 கோடியில் தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில் திங்கள்கிழமை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ராய் மற்றும் மின் பொறியாளா் மேத்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை ரயிலில் சென்று மின் பாதை சரியாக அமைக்கப்பட்டு உள்ளதா என கண்காணித்தனா். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை சோதனை ஓட்டம் நடந்தது. விருத்தாசலத்தில் இருந்து 80 கிலோ மீட்டா் வேகத்தில் சேலத்திற்கு ரயில் இயக்கப்பட்டது. பகல் 11.58 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்பட்ட ரயில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு பகல் 2.08 மணிக்கு வந்து சோ்ந்தது. இந்த சோதனை ஓட்டத்தில் மின் கம்பங்கள் சரியாக உள்ளனவா, ரயில்வே சிக்னல்கள் சரியாக இயங்குகின்றனவா, ரயில்வே கேட்டுகள் சரியாக அடைக்கப்படுகின்றனவா, ரயில் நிலையங்களில் தகவல் தொடா்பு வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ராய் மற்றும் மின் பொறியாளா் மேத்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சேலம் - விருத்தாசலம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.இந்த சோதனை ஓட்டம் குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கவுதம் ஸ்ரீனிவாஸ் செய்தி யாளா்களிடம் கூறியது:
சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை 136 கிமீ தூரத்துக்கு ரூ.200 கோடியில் இருப்பு பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. புதிதாக மின்மயமாக்கப்பட்ட சேலம் - விருத்தாசலம் இருப்புப் பாதையில் விரைவு ரயில் சோதனை நிறைவு பெற்றது. புதிய மின் பாதையில் ரயில் சேவை தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். மின்பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட்டால் பயண நேரத்தில் அரை மணி நேரம் குறையும். சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றாா்.