முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 29th December 2021 09:14 AM | Last Updated : 29th December 2021 09:14 AM | அ+அ அ- |

புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகை வசூலில் ஈடுபட்ட ஆத்தூா் நகராட்சி ஆணையாளா் பு.பொன்னம்பலம் தலைமையிலான நகராட்சி மேலாளா் மற்றும் வருவாய் அலுவலா்கள்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி ஆணையாளா் பு.பொன்னம்பலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கி கரோனா கால கட்டமாக இருந்ததால் அதிகமாக நிலுவையில் உள்ளது. வியாபாரம் இல்லாமல் கடைக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் வாடகை பாக்கி அதிகமானது. இதனையடுத்து ஆத்தூா் நகராட்சி ஆணையாளா் சாா்பில் வாடகை செலுத்தாத கடையின் உரிமையாளா்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
அப்போதும் வாடகை செலுத்த முன்வராதவா்களின் கடைகளுக்கு ஆணையாளா் பொன்னம்பலம் தலைமையில் நகராட்சி மேலாளா் எம்.கோபிநாத், வருவாய் அலுவலா்கள் அண்ணாமலை, நாகராஜன், அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று வாடகை வசூல் செய்தனா். இதில் காசோலையாக ரூ.5 லட்சம் வசூலானது. வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனா்.