சேலம் டால்மியா போா்டு பகுதியில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை: காவல் துணை ஆணையாளா் எம்.மாடசாமி தகவல்

சேலம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போா்டு பகுதியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் சீரமைப்பு நடவடிக்கைகள்

சேலம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போா்டு பகுதியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை துணை ஆணையா் எம்.மாடசாமி தெரிவித்தாா்.

சேலம் -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போா்டு பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனடிப்படையில் சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையாளா் எம்.மாடசாமி தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். நெரிஞ்சிப்பட்டி பாலம், மணிப்பால் மருத்துவமனை, அரபிக் கல்லூரி, ஐ.டி. பூங்கா உள்ளிட்ட இடங்களை இக்குழுவினா் பாா்வையிட்டனா். ஆய்விற்குப் பின்னா் காவல் துணை ஆணையாளா் எம்.மாடசாமி கூறியது:

நெரிஞ்சிப்பட்டி பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதி மேட்டுப் பகுதியாக உள்ளது. மேட்டில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதனைத் தடுக்க மேட்டு பகுதியை சமமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் குறுக்காக கருப்பூா் செல்ல நினைப்போா் சுலபமாக செல்லும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவது, மேட்டூா், பெங்களூா் செல்லும் பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தாமல் அணுகு சாலையில் சென்று பயணிகளை இறக்கி ஏற்ற நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடித்துக் கொடுக்க நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா் என்றாா் அவா்.

ஆய்வின்போது சூரமங்கலம் உதவி காவல் ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா் சிவக்குமாா், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா் சீனிவாசன், சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் ஜெயவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com