முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரி, எடப்பாடி வட்டத்தில் 201 தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 12:11 AM | Last Updated : 31st December 2021 12:11 AM | அ+அ அ- |

சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் இயக்கப்பட்டு வரும் தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வாகனங்கள், சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை போக்குவரத்து ஆணையா் உத்தரவுப்படியும், தமிழ்நாடு பள்ளி வாகனங்களின் சிறப்பு விதிகள் 2012இன் படி சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட 201 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் வாகனங்களின் தகுதிச் சான்று, காப்பீட்டுத் தேதி, அவசரக் கால வழிகள், ஓட்டுநா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம், தீயணைப்புக் கருவிகள், படிக்கட்டுகள், ஜன்னல் கதவுகள், வாகனத்தின் மேற்பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் ஓட்டைகள் உள்ளனவா என்பது குறித்து கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், வட்டார போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன், சங்ககிரி உள்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளா் பி.ஆரோக்கியராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், கே.புஷ்பா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், தீயணைப்பு நிலைய அலுவலா்கள் சங்ககிரி டி.அருள்மணி, எடப்பாடி எம்.முருகன் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
தீயணைப்பு நிலைய வீரா்கள், வாகனங்களில் தீப்பிடித்தால் தீயை அணைக்கும் முறை, முதலுதவி அளிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.