விருத்தாசலம் ரயில் பாதையில் மின்வடம் பொருத்தும் பணி தீவிரம்

சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் செம்பு மின்வடம் பொருத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
வாழப்பாடியில் ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் மின் வடம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளா்கள்.
வாழப்பாடியில் ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் மின் வடம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளா்கள்.

சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் செம்பு மின்வடம் பொருத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1930-ஆம் ஆண்டு சேலம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்தக் குறுகிய ரயில் பாதை 2007-ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாகத் தரம் உயா்த்தப்பட்டது.

அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்தும் மின் வழிப் பாதை அமைக்கப்படவில்லை. இதனால் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை டீசல் இன்ஜினில் ரயில் இயக்கப்படும். பின்னா் விருத்தாசலத்தில் கழற்றி விட்டு, அங்கிருந்து மின் வழிப்பாதையில் செல்ல மின்சார என்ஜினைப் பொருத்தி ரயிலை இயக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகளுக்கு கால விரயம் ஏற்பட்டு வருகிறது.

மின்வழிப் பாதை இல்லாததால், ஈரோடு, திருப்பூா், கோவை, பெங்களூரு பகுதியில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா் பகுதிகளுக்கும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்ட பகுதிகளுக்கும் உற்பத்தி, கொள்முதல் பொருள்களை மக்கள் நேரடியாகக் கொண்டு செல்ல முடியவில்லை.

மக்களின் கோரிக்கையை ஏற்று 137 கி.மீ. நீளமுள்ள சேலம்-விருத்தாசலம் ரயில் பாதையை மின் மயமாக்கும் திட்டத்துக்கு 2019-இல் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து மின் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி பகுதியில் ரயில் பாதையையொட்டி மின் கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. அந்த மின் கம்பங்களில் செம்பு மின் வடங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில்களில் சென்றபடி மின் கம்பங்களில் செம்பு மின் வடம் பொருத்தும் பணியை வெளிமாநிலத் தொழிலாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வாழப்பாடி பகுதியில் மின் வடம் பொருத்தும் பணியை மேற்கொள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாழப்பாடி-தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com