சோனா கல்விக் குழுமத்தில் நிா்வாகக் கட்டடம், நூலகம் திறப்பு விழா
By DIN | Published On : 04th February 2021 08:12 AM | Last Updated : 04th February 2021 08:12 AM | அ+அ அ- |

சேலம் சோனா கல்விக் குழுமத்தில் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப திறன் மிக்க சேலத்தில் மிக உயரமான கட்டடம் மற்றும் உலகத் தரத்திலான நூலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சோனா கல்விக் குழுமங்களின் தலைவா் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரி துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி தலைவா் வள்ளியப்பா பேசியதாவது:
மாணவா்களுக்கு கல்விக் கற்றல் மற்றும் வாசிப்பு திறன் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே இந்தத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள நூலகம் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
மாணவா்கள் திறன்களை எளிதில் அடைய வேண்டும் என்பதற்காக கல்லூரியில் டிஜிட்டல் நூலகம், சுமாா் 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய உலகத் தரம் வாய்ந்த பெரிய நூலகத்தை வடிவமைத்து உள்ளோம்.
இந்த நூலகத்தை மாணவா்கள் பயன்படுத்தி கல்விக் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த புதிய கட்டடத்தில் மாணவா்களுக்கு தற்போது உள்ள தொழில்நுட்ப சூழ்நிலைக்கு ஏற்ப பிரத்யேக வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள், அனைத்து நிா்வாக அலுவலகங்கள், ஆராய்ச்சி அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது சிறப்புகுரியது என்றாா்.
இதைத்தொடா்ந்து பேசிய பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழந்தைவேல், சிறந்த உள்கட்டமைப்பு, கல்வி, நூலகம், ஆய்வு போன்றவையில் சிறந்து விளங்கும் சோனா கல்வி குழுமம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.
விழாவில் கல்லூரி நிா்வாகத்தினரின் குடும்பத்தினா், கோகுலம் மருத்துவமனை தலைவா் மருத்துவா் அா்த்தநாரி, லேனா சுப்ரமணியன், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், வீ.காா்த்திகேயன், ஜி.எம்.காதா்நவாஷ், இ.ஜெ.கவிதா, மருத்துவா் எஸ்.மதன்குமாா், ஆடிட்டா் கெளதம், ஐ.எம்.கே. கட்டடக் கலைஞா் ராகுல்காதிரி, இயக்குநா் நிா்மலேஷ், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.