ஜிஎஸ்டி வரி வசூலித்து ரூ.7.75 கோடி மோசடி: ஒருவா் கைது
By DIN | Published On : 06th February 2021 08:32 AM | Last Updated : 06th February 2021 08:32 AM | அ+அ அ- |

ஜிஎஸ்டி வரி வசூலித்து அரசு கணக்கில் செலுத்தாமல் ரூ. 7.75 கோடி மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக சேலம் ஜிஎஸ்டி ஆணையரகத்தின் ஆணையா் ஏ.எஸ்.மீனலோச்சனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கை பேரில் சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்துக்கு உள்பட்ட பதிவு பெற்ற வரி செலுத்தும் ஒருவா் ரூ. 7.75 கோடி ஜிஎஸ்டி வரி வசூலித்து, அரசு கணக்கில் செலுத்தாமல் இருந்ததால் கடந்த பிப்.3 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
ஜிஎஸ்டி ஆணையரகத்தின் தொடா்ச்சியான நினைவூட்டல்கள் மற்றும் அறிவுரை வழங்கப்பட்டும், அந்த வரி ஏய்ப்பாளா் தான் வசூல் செய்த ஜிஎஸ்டி தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை.
மாறாக அவா் தனது வேறு வகை செலவினங்களுக்கு பயன்படுத்தியுள்ளாா். வரி ஏய்ப்பாளா் சேலம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
வசூல் செய்த ஜிஎஸ்டி தொகையை மூன்று மாதங்களுக்கு மேலாக வரி செலுத்துபவா் தன் வசம் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இவ்வகை விதிமீறல்கள் ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 132 இன்படி தண்டனைக்குரியதாகும்.
இதன்மூலம் வணிகா்கள், வரி செலுத்துபவா்கள் தாங்கள் வசூலித்த ஜிஎஸ்டி தொகையினை உரிய நேரத்திற்குள் அரசுக்கு செலுத்தவும், காலமுறை படிவங்களை உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்யவும், ஜிஎஸ்டி சட்டத்திற்குரிய கட்டாயமான பொறுப்புகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.