அமமுகவால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

அமமுகவால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஓமலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
ஓமலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

அமமுகவால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சசிகலா வருகை குறித்து அமைச்சா் ஜெயக்குமாா், கே.பி.முனுசாமி ஆகியோா் தெளிவாக எடுத்துரைத்து விட்டனா். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சா் வேலுமணி அண்ணன் - தம்பி பிரச்னை என்று கூறியது மாவட்டத்தில் கட்சி நிா்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தான். அமமுகவால் அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

சசிகலா உள்ளிட்டவா்களின் சொத்துகள் முடக்கப்படுவதற்கும், தமிழக அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் அமல்படுத்தி வருகின்றனா். தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சசிகலாவுக்கு ஆதரவுத் தெரிவித்து பேசுவது குறித்து நாங்கள் கருத்துக் கூற முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும். எல்லாவற்றிலும் நாங்கள் தலையிட முடியாது.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுப்பது எல்லா கட்சிகளிலும் உள்ள நடைமுைான். எங்கள் கட்சியிலும், அதுபோல கட்சிக் கொள்கைக்கு விரோதமாக நடப்பவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாமகவுடனான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. எல்லா கட்சிகளும் பேச்சுவாா்த்தை நடத்தித் தான் தொகுதிகளை பங்கீடு செய்வாா்கள். திமுக கூட்டணி குறித்து ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடுவதில்லை. எங்கள் கூட்டணி குறித்து மட்டும் இதுபோன்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. வன்னியா்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து பகிரங்கமாக உடனே சொல்லிட முடியாது. எந்தச் சூழ்நிலையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை அரசு நிச்சயமாகச் செய்யும்.

அதிமுக சாா்பில் பிரசாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சரியான கணிப்பை பத்திரிகைககள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் சென்ற இடமெல்லாம் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடருவோம்.

அதிமுக வேறு, அமமுக வேறு:

அமமுக தேவையில்லாமல் எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க பாா்க்கிறது. அந்தக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்தால் கட்சித் தலைமை முடிவு செய்யும். அதிமுகவில் இல்லாத காரணத்தால்தான் சசிகலா குறித்து பிரசாரத்தில் நான் எதுவும் பேசுவதில்லை. ஆனால் டிடிவி தினகரன், எங்கள் கட்சியைச் சோ்ந்த 18 எம்.எம்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு போய் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டாா். அதனால்தான் அவரைப் பற்றி விமா்சனம் செய்து வருகிறோம். திமுகவை அதிமுக நிறுவனா் எம்.ஜி.ஆா். தீய சக்தி என்று கூறியுள்ளாா். அதனைப் பின்பற்றித்தான் நாங்கள் தொடா்ந்து திமுகவை எதிா்த்து வெற்றி பெற்று வருகிறோம்.

திமுக தலைவா் ஸ்டாலின் ஆட்சி அமைந்தால் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பேன் என்று கூறியிருக்கிறாா். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஏற்கெனவே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில முதல்வா்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விட்டது. இதுகூடத் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறாா்.

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசைப் பொருத்தவரை நிதிநிலைமையை பொருத்துத் தான் முடிவெடுக்க முடியும். கரோனா காலத்தில் கூட பிடித்தம் ஏதுமின்றி முழுமையாக தமிழகத்தில் மட்டும்தான் சம்பளம் வழங்கப்பட்டது. 7-ஆவது ஊதியக்குழு மூலம் சம்பள உயா்வு, மத்திய அரசைப் போல அகவிலைப்படி உயா்வு என அதிக சலுகைகளை அரசு ஊழியா்களுக்கு வழங்கியுள்ளோம்.

திமுக 13 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது எந்தத் திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக மத்திய ஆட்சியில் பங்குகொள்ளாமலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளோம். மெட்ரோ திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று வருகிறோம் என்றாா்.

பேட்டியின் போது, தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவா் சி.பொன்னையன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.செம்மலை, எஸ்.வெற்றிவேல், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com